Pages

vethathiri maharishi

vethathiri maharishi

வேதாத்திரியம்

வேதாத்திரியம்
Vethathiriyam; Vethathiri Maharishi Poem with Professor Vallal Ramamurthy Explanations

போரில்லா நல்லுலகம்; பொருள் துறையில் சமநீதி;
நேர்மையான நீதிமுறை; நிலவுலகுக்கோர் ஆட்சி;
சீர்செய்த பண்பாடு; சிந்தனையோர் வழி வாழ்வு;
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு; தெய்வ நீதி வழி வாழ்தல்;
தேர்த்திருவிழா தவிர்த்தல்; சிறுவர்கட்கே விளையாட்டு;
செயல்விளைவு உணர்கல்வி; சீர்காந்த நிலை விளக்கம்;
பார்முழுதும் உணவு; நீர் பொதுவாக்கல்; பல மதங்கள்
பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை தேர்ந்திடுதல்.

ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சமுதாய
மக்களை மேம்படுத்துவதற்காக வேதாத்திரியம் என்ற தலைப்பில்
நமக்கு அளித்துள்ள பதினான்கு தத்துவங்களின் தொகுப்பே இந்த
கவிதை. நோக்கம் உலக அமைதி. ஒவ்வொரு தலைப்பும் மக்களின்
விழிப்புநிலையை உயர்த்துவதே ஆகும். அவைகளை தனித்தனியாக
பின்னர் சிந்திப்போம். இந்த நன்னாள் முதல் நாம் அனைவரும்
தினமும் உலக அமைதி விரைவில் கிடைக்க இறை அருளையும்,
குரு அருளையும் பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

வேதாத்திரியம் (1) போரில்லா நல்லுலகம்:
உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே
உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.
உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

உலகில் பிறந்த நாம் யாரும் நாம் சுவாசிக்கும் காற்றையோ,
உலகிற்கு ஒளிகொடுக்கும் சூரியனையோ, நம் வாழ்க்கைக்கு
அவசியமான நீரையோ, இந்த நிலத்தையோ செய்யவில்லை.
ஆனால் அதற்கு உரிமையை மட்டும் அனைவரும் பெற முயற்சியை
மேற்கொள்கிறோம். இதன் விளைவே உலகில் போர் உருவாகிறது.
போரினால் ஏற்படும் துன்பங்களை ஒரு நிமிடம் உலக மக்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது.
பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உறுப்புகள் இழப்பு, குடும்ப உறுப்பினர்
இழப்பு, இப்படி என்னும் எவ்வளவோ. இவைகளில் எதையும் நம்மால்
ஈடு செய்யமுடியுமா. யோசிக்கவேண்டும். உலக அறிஞர் பெருமக்கள்
ஒன்றுகூடி ஒரு திட்டம் தயாரிக்கவேண்டும். இந்தப் போரை எப்படி
தவிர்ப்பது என்று ஆராய வேண்டும். ஏற்கனவே நம்மிடம் இருக்கின்ற
ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டி, அச்சபையில் உள்ள பாதகாப்புச்
சபையின் பொறுப்பில் எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பையும்
கவனிக்கும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்க
வேண்டும். எல்லா நாடுகளும் அதன் அதிகாரத்திற்கு ஒத்துழைப்பு
நல்கவேண்டும். போரைத் தவிர்க்க முடியும். போருக்காகும் செலவுகளை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும். உலகம் அமைதி பெரும். வறுமை நீங்கும். ஒற்றுமை உருவாகும்.

வேதாத்திரியம் (2) பொருள் துறையில் சமநீதி:
வீடு தொழிற்சாலை விளைநிலம் வியாபாரம்
விஞ்ஞான இயந்திரங்கள் ஆட்சி பீடம்
பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக
பலபடியில் கூட்டுறவு முறை வகுத்து
நாடு வளம் பெற்றுலகத் திணைப்பைக் கொண்டு
நல் வாழ்வு கிட்டுவதற்கு ஏற்றவாறு
ஈடு இணையற்ற ஒரு திட்டம் வேண்டும்
இம் முறையே மக்களுக்கு நலம் பயக்கும்.

உலகில் வாழ் மக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை
நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பொருளாதார
வளம் அமையவேண்டும். பணம் என்பது உழைப்பின் அடையாளம்
(token of labour is money).
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட
வேண்டும். மேலும் ஒருவரின் ஊதியம் இன்னொரு குடும்ப
உறுப்பினருக்கும் நிறைவு செய்யக்கூடிய அளவில் அமையவேண்டும்.
உழைக்கத் தெரியாத, உழைக்க முடியாத மக்களுக்கும் ஏற்றதொரு
வாழ்வாதாரத்தை அரசு அமைக்கவேண்டும். மேலும் உலகில்
ஒருவர் உழைப்பை இன்னொருவர் பறித்துண்ணும் போக்கு வெகு
அதிகமாகவே உள்ளது. இது மக்களிடம் மட்டுமல்ல, ஆட்சியாளரிடம்
கூட அமைதுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும்
வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைவரும் உழைத்துண்டு
வாழ வேண்டும். உழைப்பின் அவசியத்தை அனைவரும் அறியவேண்டும். இதற்கு ஏற்றவகையில் ஓர் உலக ஆட்சி அமைந்து
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க இறை அருளும் குரு அருளும்
துணை புரியட்டும். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (3) : நேர்மையான நீதிமுறை:
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
கொள்டையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
கொலைக்கு கொலை நீதியென்றும் குற்றம் செய்த
கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவி மக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்ச்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?

நீதி என்பது நேர்மையாக இருக்க வேண்டும். குற்றம் புரிந்த ஒருவன்
தக்க சாட்சி இல்லாமல் தப்பிவிட்டாலும், அது பெரும் தவறு அல்ல.
ஆனால் ஒரு நிரபராதி எந்த சூழ்நிலையிலும் தண்டனைக்கு ஆளாக
நேரிடக்கூடாது. பொதுவாக இந்த நீதி எல்லா நாடுகளிலும் உள்ளது.
ஆனால் ஒருவன் கொலை செய்தான் என்ற குற்றத்திற்காக அவனுக்கு
நீதிமன்றம் தூக்கு போன்ற கொலை தண்டனை வழங்குகின்றது. கொலை செய்தவனுக்கு தண்டனை என்பது சரி என்றாலும், அவனுக்கு
மரண தண்டனை நிறைவேற்றிய பிறகு அவனின் மமைவி, மக்கள்,
பெற்றோர், உறவினர்கள் எவ்வளவு துன்பம் அடைகின்றார்கள்.
இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இவர்களுக்கு எதற்கு தண்டனை?
அறிவற்றவன் செய்த கொலைக்கு அறிவில் சிறந்த நீதிபதி அளித்த
தண்டனையும் கொலைதானே? இது நீதி அல்லவே. மேலும் ஒருவன்
குற்றவளியாகிறான் என்றால் அவனுக்கு தேவையான வாழ்க்கை
தேவைகள் நிறைவேற போதிய வேலை வாய்ப்பு போன்றவற்றை
அளிக்காத சமுதாயமும் குற்றவாளிதானே? மேலும் நீதி என்பது
நேர்மையான முறையில் அமைய ஆன்றோர்கள் சிந்தித்து நல்ல
சட்டங்களை இயற்றவேண்டும். அதை செயல்படுத்த சிறந்த அரசும்
அமைய வேண்டும். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (4): நிலவுலகுக்கோர் ஆட்சி:
ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு
உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்
பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு
தெய்வநிலை யகத்துணரும் இறைவணக்கம்
நேர் வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும்
நெறிமுறைகள் இவையினைந்த வாழ்வு காண்போம்.

ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரம் அளித்து உலக நாடுகள்
ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும்
பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை .நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு . நா. சபை மூலம் உலகம் ஏற்றுக்கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர்
வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள்
இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் .நா. சபை மூலம்
ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல
சேவைக்குத் திருப்பப்பட்டுவிட்டால் பதினைந்து ஆண்டுக்
காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான
பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும்
அமைதியாக வாழ முடியும். உலகெங்கும் ஊர் வாரியாக, நகர்
வாரியாக, நாடுகள் வாரியாக இந்த திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும்,
எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத்
தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச்
சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும்
உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து
நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

வேதாத்திரியம் (5): சீர்செய்த பண்பாடு:
புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்
போதை, போர், பொய், புகை ஒழித்து அமுல்செய்வோம்
அதிகசுமை ஏதுமில்லை அவரவர் தம் அறிவின்
ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்;
மதி பிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா
மாநெறியும், உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
பொது விதியாய்ப் பிறர் பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தை
போற்றிக்காத்தும், பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

நமது முன்னோர்கள் நெறி தவறி வாழும் மக்களை நெறிப்படுத்த
பல வழிகளில் முயற்சி செய்து பல பழக்க வழக்கங்களை உருவாக்கினர்.
இவைகளே பண்பாடு என்று வழங்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் எல்லா மக்களுக்கும், எல்லா நாட்டிற்கும், எல்லா காலத்த்திற்கும் ஏற்றதாக அமையவில்லை. இன்றைய வாழ்க்கை
முறைக்கு தேவையற்றவைகள் நிறையவே உள்ளன. எனவே எல்லா
காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்
வகையில் புதியதொரு பண்பாடு வேதாத்திரி மகரிஷி அவர்களால்
நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு வீட்டிற்கு நான்கு புறமும்
சுற்றுச்சுவர் அவசியமோ அதைப்போன்று ஒரு மனிதனின் ஒழுக்க
வாழ்க்கைக்கு போதை தரத்தக்க பொருள்களை உபயோகிப்பது, போர்புரிவது, பொய் சொல்வது, புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது ஆகிய நான்கையும் தவிர்த்து வாழவேண்டும்.
மேலும் ஐந்து ஒழுக்கநெறிகளை வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.
அவை (1) அவரவர் அறிவாலும், உடல் உழைப்பாலும் வாழ்தல்;
(2)
மற்றவர்கள் உடல், மனம் வருத்தாமல் வாழ்தல்;
(3)
உணவுக்காக உயிர்கொலை புரிவதை தவிர்த்தல்;
(4)
பிறர் பொருட்களை, வாழ்கை சுதந்திரத்தை போற்றிக்காத்தல்;
(5)
பிறர் துன்பத்தை முடிந்த அளவு போக்கும் அன்பு ஆகியவை வேண்டும். இவை எக்காலத்திற்கும் எல்லோருக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய புதிய பண்பாடு ஆகும்.

வேதாத்திரியம் (6): சிந்தனையோர் வழி வாழ்வு:
வாழவேண்டும் என்றெண்ணி மனிதனாக
வந்ததில்லை, எனினும் நாம் பிறந்துவிட்டோம்.
வாழவேண்டும், உலகில் ஆயுள் மட்டும்,
வாழ்ந்தவர்கள் அனுபவங்கள் தொடர்ந்து பற்றி.

இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் எப்படி வாழவேண்டும் என்று
அறியாமல், தானும் துன்புற்று, பிறரையும் துன்புறுத்தி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். அனைவருமே துன்பமற்ற இன்பமான
வாழ்வைத்தான் விரும்புகிறோம். ஆனால் இன்பத்தைக் காட்டிலும்
துன்பமே மிகுந்து காணப்படுகிறது. காரணம் யாதெனில் நம்
செயல்களே. அவற்றை சீரமைத்து ஒழுக்கமான வாழ்க்கை நாம்
மேற்கொண்டால் உலகம் முழுவதிலும் இன்பமே நிலைத்திருக்கும்.
ஆன்றோர் பெருமக்கள் கூறும் சிறந்த சிந்தனைகளை பின்பற்றி,
அவர்கள் வழிநின்று நமது எண்ணம், சொல், செயல்களை சீரமைத்து
வாழ்ந்து, நாமும் இன்புற்று, சமுதாயத்திற்கும் இன்பத்தை அளிக்க
முயற்சி செய்வோமாக. குருவருளும் திருவருளும் நமக்கு துணை
புரியட்டும். வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 7 : சிறப்புணர்ந்த பெண் மதிப்பு:
எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்?

பெண்மையின் சிறப்பினை அன்றுதொட்டு இன்றுவரை பலர்
எடுத்துரைத்தாலும், சிலர் பெண்மையினை இரண்டாம் தரமாகவே
நடத்தி வருகின்றனர். இந்நிலையை மாற்றி பெண்மையை போற்றவும், சிறப்பிக்கவும் சில சிந்தனையாளர்கள் முயன்று வருகிறார்கள்.
அவர்களுள் நமது அருட்தந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு குடும்பத்தினை நடத்துவது, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது, முதியோர்களை பராமரிப்பது, இப்படி பெண்களின் பங்கு மிகவும் போற்றுதற்குரியது. ஆனால் இவர்களின் சிறப்பு பெரும்பாலும் பலரால் அறிந்துகொள்ளப் படுவதில்லைஇவ்வுலகில் வாழுகிற ஜீவராசிகள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெண்மையே... இத்தகைய பெண்ணினம் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை வளம் அனைத்திலும் உயர்வு நிலை பெறுவதே சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் சாலச்சிறந்தது. இன்று உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிபேர் ஆண்கள். இவர்களை பெற்றெடுத்தது பெண்களே. ஆண்கள் அனைவரும் பெண்களின் அன்பளிப்பு எனில் அது மிகை ஆகாது. பெண்மையை போற்றுவோம். வாழ்த்துவோம்.

பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன்,
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் இதைவிட
பெருமை வேறென்ன எடுத்துச் சொல்வதற்கு.

வேதாத்திரியம் (8): தெய்வ நீதி வழி வாழ்தல்:
இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற
மறைவாய் இருந்து அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவது யார்
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவது யார்
உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்களனைத்தும் படைத்தது யார்
பலவும் ஒழுங்காய் முறைபிறழா
பாங்கில் இயக்கி வருவது யார்
அவரே தெய்வம், பேராற்றல்
அறிவைக் கொண்டே வணங்கிடுவோம்.

தெய்வம் என்கிற இறைநிலை எங்கும் நிறைந்துள்ளது, அது
தனக்குள்ளும் அறிவாக இருந்துகொண்டு, தான் செய்வதையெல்லாம்
கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாத மனிதன்
உணர்ச்சிவயப்பட்டும், அலட்சியமாகவும் செயல்களை செய்து
தானும் துன்புற்று, சமுதாயத்திற்கும் துன்பத்தைக் கொடுக்கின்றான்.
நமது செயல்களுக்கு விளைவாக இறைநிலையே வெளிப்படுகின்றது
என்ற்கிற உண்மையை உணர்ந்து, நமது எண்ணம், சொல், செயல்களை
ஒழுங்குபடுத்தி வாழ்வதே தெய்வநீதி வழி வாழ்வதாகும்.

வேதாத்திரியம் (9): தேர்த் திருவிழா தவிர்த்தல்:
கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்
கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொன்னேன்
கடவுள் என்ற கற்சிலையை அறையில் வைத்துக்
கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்
கடவுளுக்குப் பசிதீர்க்க பால், நெய், தேங்காய்
கனிவகைகள் கற்சிலைமுன் படித்தேன்; ஆனால்
கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்
கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக.

வேதாத்திரியத்தில் இன்று நாம் சிந்திக்கக் கூடியது மிக உயர்ந்த ஒரு
கருத்தைப் பற்றியது. இறைவன் யார்? இறைவனுக்கு உருவம்
உள்ளது என்று நினைத்து நாம் அவனுக்கு, நாம் என்னவெல்லாம்
நமக்காக செய்துகொள்கிறோமோ அவையனைத்தையும் அவனுக்கு
செய்கிறோம், ரசிக்கிறோம். மேலும் இறைவனிடம் நீ எனக்கு இது
செய்தால், நான் உனக்கு அது செய்கிறேன் என்று வியாபாரம்
செய்கிறோம். சற்றே சிந்தித்துப் பார்ப்போம். இந்தப் பிரபஞ்சத்தைப்
படைத்து, கோடானுகோடி கோள்களையும், உயிர்களையும்
படைத்து, அவை அனைத்தையும் இயக்கிக்கொண்டும், காத்துக்
கொண்டும் இருப்பவன் இறைவன். அவனுக்கு தேவை என்பது
இல்லை. ஏனெனில் அவனுக்கு உடலும் இல்லை, குடலும் இல்லை. அப்படியெனில் இவ்வளவு நாட்களாக நாம் செய்துகொண்டிருக்கும்
பூஜை, ஆராதனை, திருவிழாக்கள் இவையெல்லாம் எப்படி உருவாகி
இருக்கும்? ஒழுக்க நெறி தவறி வாழும் மக்களை நல்வழிப்படுத்தி
அவர்களை திருத்துவதற்கும், சமுதாயத்திற்கு அவர்களால் ஏற்படும்
துன்பங்களைத் தவிர்ப்பதற்கும் உண்மையான இறையுணர்வு
பெற்றவர்களும்,சிந்தனையாளர்களும் உருவாக்கியதே ஆகும்.
இந்த நன்னோக்கத்தைப் பயன்படுத்தி சில வியாபாரிகளாலும், சில
சுயநலவதிகளாலும் உருவாகாப்பட்டவைகளே இத்தகைய தேர்த்
திருவிழா போன்ற பல. இவைகளால் ஏற்படும் செலவுகளையும்,
இத்தகைய நேரங்களில் ஏற்படும் சண்டை, சச்சரவு போன்றவைகளை
சிந்தித்து தவிர்ப்போம். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (10): சிறுவர்கட்கே விளையாட்டு:
சீறல், சினத்தல் ஒழித்து உடல் உரமாக்கும்
சிறுவர்க்காம் விளையாட்டு எண்வகையாம், அவை:
ஏறல், குதித்தல், வளைதல், நீந்தல், ஓடல், எறிதல், பளுதூக்கல், தாண்டல் என மொழிவோம்.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமான ஒரு பயிற்சி
ஆகும். ஏனெனில், வளரும் குழந்தைகளுக்கு உடலை வலிமைப்
படுத்துவதற்கும், உடல் வளர்ச்சியடைவதற்கும், உறுப்புகள் நன்கு
செயல்படுவதற்கும், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவதற்கும்
ஏற்றதொரு உடற்பயிற்சி விளையாட்டு ஆகும். ஆனால், இன்றைய
குழந்தைகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு
படிப்பதற்கே நேரம் போதவில்லை, இந்த நிலையில் அவர்கள் எங்கே
விளையாடுவது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் பெற்றோர்கள்
அவர்களை பெரும்பாலும் விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை.
நிறைய குழந்தைகள், பெரியோர்களைப்போலவே மன உளைச்சல்,
மன அழுத்தம் போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். அரசும்,
ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்த கருத்தை உணர்ந்து, ஓரளவு
ஆவது குழந்தைகளுக்கு விளையாட அனுமதிப்பது, அவர்களுக்கு
நன்மைப்பயக்கும். மேலும், விளையாட்டு என்பது இன்றைய நிலையில் பெரியவர்கள் செயலாக உள்ளது. ஒருகாலத்தில் இந்தநிலை இருந்தது. அப்போது அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அல்லது வலிய விலங்குகளிடம் போராடவேண்டும். எனவே அவர்கள் உடலை வலிமைப்படுத்த பல விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். இன்று
அந்தநிலை இல்லை. மேலும் விளையாட்டுப் போட்டிகளினால்
குழு குழுவாகவும், ஊர் ஊராகவும், நாடு நாடாகவும் சண்டையும்,
பகையும்தான் உருவாகிறது. எனவே விளையாட்டு என்பது
சிறுவர்களுக்கு மட்டுமே என்ற நிலை வரவேண்டும். பெரியவர்கள் விளையாடுவது பற்றி ஒரு மேல்நாட்டு அறிஞர் கீழ் கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார், "பதினோரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள், பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்" என்று. சிறுவர்கள் விளையாட வாய்ப்பு அளிப்போம். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 11: செயல் விளைவு உணர் கல்வி:
கண், காது, மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
கருத்துக்குக் கடவுள்தனை சிறுமையாக்கிப்
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
போகும் வழி தெரியாமல் தவித்து, வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை
கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு
ஒத்த உயிர்த் தொண்டாகும்; உணர்வோம், செய்வோம். (1)

இறையுணர்வும் அறநெறியுமின்றி மனித வாழ்வு
ஏற்றபடி அமையாது என்ற உண்மை கண்டோர்
மறைமுகமாய் முக்காலத்தோர் அறிவிற்கேற்ப
மதித்திடவும் ஒழுகிடவும் கருணையுள்ளம் கொண்டோர்
குறையெனினும் வேறு வழியின்றி இறைநிலைக்குக்
கொடுத்தார்கள் உருவங்கள், பெயர்கள்.
நிறைவாழ்வுக்கு அறம்புரியும் சொர்க்க ஆசை காட்டி
நெறி பிறழ்வோர் அச்சமுற நரகமும் கற்பித்தார். (2)

செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப் பிருக்க
பயனென் தவறிழைத்துப் பரமனைப் பின் வேண்டுவதால்.(3)

அன்றும் இன்றும் என்றும் செயலுக்கேற்ற விளைவுகள் வருகின்றன.
இதை அளிப்பவன் இறைவன். இதை மனிதன் அறிவதில்லை.
அல்லது அறிந்தாலும் அலட்சியம் செய்கிறான். தவறான
செயல்களை செய்கிறான். விளைவாக துன்பம் வருகிறது.
வேதனை அடைகிறான். வருத்தப் படுகிறான். கடவுளை குறை
சொல்கிறான். கடவுள் என்பது சத்தியமானது. நீதி தவறாதது.
அது செயலுக்கு ஏற்ற விளைவை மட்டுமே அளிக்கின்றதுஉனக்கு வரும் இன்பம், துன்பம் இரண்டுமே உன்னுடைய செயலைப் பொறுத்தே அமைகிறது. கடவுளைக் குறைகூறுவது அறியாமை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றனார்.
An action which has an equivalent and opposite reaction - Albert Einstein.
மனம் என்னும் கேப்டன் ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு,
நாக்கு, தோல்) மற்றும் கர்மேந்திரியங்கள் (கைகள், கால்கள், வாய்,
குதம், குய்யம்) எனும் பத்து உறுப்புகளோடு சேர்ந்து செயல்களை
செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து நல்லவைகளை மட்டுமே
செயலாற்றினால் இன்பத்தை மட்டுமே பெறலாம். மாறாக செயல்
புரிந்தால் துன்பமே மிஞ்சும். முக்காலத்தில் இதை உணராமல்
தவறான செயல்களை செய்து தாமும் துன்புற்று, பிறருக்கும்
துன்பத்தை அளித்த மக்களை திருத்துவதற்காகவே கோயில்,
கடவுள், சொர்க்கம், நரகம் போன்றவைகளை கற்பித்து, நல்லது
செய்தால் இறைவன் சொர்கத்தை அளிப்பான் என்றும் தீயவற்றை
செய்தால் இறைவன் நரகத்தை அளிப்பான் என்றும் மக்களை ஆசை
வார்த்தைகளைக் கூறியும், அச்சுறுத்தியும் நல்வழிப்படுததினர்
மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்ட சிந்தனையாளர்கள்.
வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 12: சீர் காந்த நிலை விளக்கம்:
காந்தநிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம்; அதன் மாயத் திருநடனக் காட்சியாய்
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்
சாந்தமான மன நிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன் உளம்
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே.

காந்தம் என்ற ஒன்று இல்லாத இடமோ,பொருளோ, சீவனோ
பிரபஞ்சத்தில் இல்லை எனலாம். சுத்தவெளி எனப்படும்
இறைநிலை தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்துவதால்
உருவாகும் இறைத்துகள்கள், அதே சுத்தவெளியின் தொடர்
அழுத்தத்தால் தற்சுழற்சி பெற்று, மேலும் அவைகள் இனைந்து
விண்ணாகி, அந்த விண்ணும் தற்சுழற்சியோடு இயங்குகின்றது.
அவ்வாறு விண் சுழலும் போது அதன் சுழற்சிக்கு ஈடு கொடுக்க
முடியாத இறைத்துகள்கள் அவ்விண்ணிலிருந்து வெளியேறுகிறது.
இவைகள் இறைநிலையோடு மோதும்போது தன்னிலை இழந்து
காந்தம் என்ற நிலை அடைகிறது. இக்கந்தமே பஞ்ச பூதங்களில்
அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என்றும் சீவன்களில் இவைகளை
உணரும் மனமாகவும் செயல் புரிகிறது. இக்காந்தமே பிரபஞ்சம்
முழுவதும் ஆற்றலாகவும், அறிவாகவும் இருந்து அனைத்தையும்
வழி நடத்துகின்றது. வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 13: பார் முழுதும் உணவு, நீர் பொதுவாக்கல்:
இன்று உலகில் எழுநூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை பெருகி
விட்டது. இதில் எத்தனை பேருக்கு போதிய அளவு உணவு, நீர், இருப்பிடம், போன்ற வாழ்க்கைத் தேவைகள் நிறைவு செய்யப் படுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி. ஆனால் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கை வளங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு உரிமை உண்டு. காற்றும், சூரிய ஒளியும் எப்படி தடையின்றி எல்லோருக்கும் கிடைக்கின்றதோ அதே போன்று உணவு, உடை, நீர், இருப்பிடம் இவை அனைத்தும் கிடைக்கவேண்டும். இதற்கு ஓர் உலக ஆட்சி என்ற அமைப்பு உருவானால் மட்டும்தான் முடியும். அவ்வாட்சியின் கீழ் எல்லா நாடுகளும் ஒன்றிணைக்கப்படவேண்டும். அவ்வாட்சியில் எல்லா நாட்டு வல்லுணர்களும் பங்கு வகிக்கவேண்டும். அவர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் அனைத்தும் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும். முதலில் உலகில் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து நதிகளையும் இணைத்து, எல்லா பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் எல்லா நாடுகளும் நீர்வளம் பெறும்போது அங்கு உணவு உற்பத்தி பெருகும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். வாழ்க வளமுடன்.

உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே
உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.
உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

வேதாத்திரியம் 14 : பல மதங்கள் பல கடவுள் பழக்கம் ஒழித்து
உண்மை ஒன்றைத் தேர்ந்திடுதல்:
உலக மக்கள் பண்பாடு உருக்குலைந்து போச்சு
ஒவ்வொருவரும் பிறர்க்கு பகைவராகின்றார்கள்
பல மதத்து தலைவர்களும் கூடி ஓர் அரங்கில்
பற்றற்று தெய்வநிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்று உலகில் வாழ்கின்ற சீவன்களில் உடல் அமைப்பிலும்,
அறிவின் உயர்விலும், வாழ்க்கை முறையிலும் மிக உயர்ந்த
நிலையில் இருப்பவன் மனிதன். ஆனால் வினைப் பதிவின்
காரணமாக, விலங்கினங்களிலிருந்து வித்துத் தொடராக
வந்ததனால் மனிதப் பண்புகளை அறியாமலும், அறிந்தும்
அலட்சியம் செய்தும், உணர்ச்சி வயப்பட்டு செயல்கள் ஆற்றி
துன்புற்றும், துன்புறுத்தியும் வாழ்கின்ற மக்களை நெறிப்படுத்தி
பிறவியின் நோக்கமாகிய முழுமைப் பேறை அடைவதற்கு
உதவி செய்ய நினைத்த சிந்தனையாளர்கள் ஆங்காங்கே
உருவாக்கிய அமைப்புகளே இன்று மதங்கள் என்று அழைக்கப்
படுகின்றன. காலப்போக்கில் சுயநலம் எழுச்சி பெற்றதனால்
மதங்களுக்குள்ளே சண்டைகளும் சச்சரவுகளும் உருவாகின.
இன்று அறிவில் வளர்ச்சி பெற்ற, உண்மைப் பொருளை உணர்ந்த
மதத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாய்வு செய்து இறைநிலை
என்பது ஒன்றா? பலவா? என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்.
இறைநிலை ஒன்று எனில் அது எது என்றறிந்து உலக மக்கள்
அனைவருக்கும் அதை தெரிவித்தல் அவசியமாகும். உலகிலுள்ளோர்
அனைவரும் அந்த ஒரே கடவுளை வணங்குவதோடு, சண்டை
சச்சரவுகளை ஒழித்து ஒத்தும் உதவியும் வாழ்வது இன்றைய
காலகட்டத்தில் சமுதாய மேம்பாட்டிற்கு உதவி புரியும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
வேதாத்திரிய வாழ்க்கை நெறி 14-ம் நிறைவுற்றது.
www.vethathiri.edu.in
www.facebook.com/groups/vethathiriyam

JEEVA Vazhga Valamudan

Labels

Blogspot Readers